மாற்றுப் பார்வையில் மொழி
மாற்றுப் பார்வையில் மொழி
மனிதனின் வயது 4லட்சம் (Neanderthals) என்றிருக்க மொழிகளின் வயது 4000-6000 வருடத்தை தாண்டவில்லை. காரணம் மொழி அதற்குமுன் இருந்ததற்கான அடையாளங்களை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை இரண்டு லட்சத்திற்கு முன்பு வாழ்ந்த மனிதன் ஏதோ எழுத்துக்கள் மூலம் தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்பது நாளை கண்டுபிடிக்கப்பட்டால் மொழியின் வயது இரண்டரை லட்சத்தை தாண்டும் என்பதே உண்மை.
மொழி மனிதனுடன் சேர்ந்தே பிறந்தது என்பதே உண்மை. மனிதன் செவிடாக பிறக்கவில்லை. காது கேளாதவர்கள் தான் ஒலியை எழுப்ப முடியாதவர்களாக இருப்பார்கள். மனிதன் அப்படி இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவன் பிறந்த கணம் முதல் ஏதோ ஒரு ஓசையில் சக மனிதனுடன் தொடர்பு கொண்டு தான் இருந்திருக்க வேண்டும். இன்று இருக்கும் விலங்குகளைப் போல.
கிளிகள் முதல் உலகில் உள்ள அனைத்து விலங்குகளும் மனிதனுக்கு மொழி ஆசிரியனாக இருந்திருக்க வேண்டும். இயற்கை எனும் ஆசான் முன் ஆதிமனிதன் ஆகச் சிறந்த மாணவன் என்பதில் ஐயமில்லை.
ஒரு மொழி துளித்துளியாக உருவாகி அது முழுமை பெற்று செம்மொழி போன்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு காலம் பல எடுத்து இருக்கும். ஆனால் மொழிகளின் வயதை அதனை வைத்து அளப்பது தவறு. ஓர் ஓசையில் பேசப்பட்டு இருந்த மொழிகள் காலப்போக்கில் ஓசைகளை சேர்த்து வார்த்தைகளாக பேசத் தொடங்கி இருப்பார்கள். அதன் பிறகு பல காலங்கள் கழித்து வாக்கியங்கள் போன்று அமைந்திருக்கும். ''இலக்கணம்'' என்பது இறுதி கட்டம்.
இலக்கணத்தை ஒரு மொழி அடைந்து விட்டது என்றால் அது வயதுக்கு வந்து விட்டது என்று பொருள்படும். அதன் பிறகு எல்லா காலத்திலும் அது சொற்களை வளர்த்து வளர்ந்து கொண்டே இருக்கும் இருக்க வேண்டும். இப்படி மொழி முழுமை பெறுவதற்கு முன்பாகவே மனிதன் தனது வாழ்க்கைக்காக அதாவது இயற்கை சீற்றத்தை எதிர்த்தோ அல்லது உணவை தேடியோ உலகில் பல்வேறு பகுதிக்கு பிரிந்து சென்று விட்டான் என்பதே உண்மை.
அப்படி பிரிந்து சென்றவர்கள் அதுவரை தாங்கள் சேர்ந்து இருந்தபோது எழுப்பிய ஓசைகளின் அடிப்படையில் வார்த்தைகளை அமைக்க தொடங்கியிருப்பார்கள் அப்படி வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு வகையில் மொழிகளை உருவாக்கி இருக்கும்.
எல்லா மொழியும் ஒரு மொழியில் இருந்து பிறந்தது என்பதை ஏற்க இயலாது. ஏனென்றால் மொழி என்ற வார்த்தைக்கு நாம் வைத்திருக்கும் அர்த்தம் அப்படி. ''மொழி முழுமை பெற்றது''. முழுமை பெற்றதிலிருந்து இன்னொன்று பிறந்தது என்பது அர்த்தமற்றது, சாத்தியமற்றது, அவசியமற்றது. அதனை ஏற்பீர்கள் என்றால் ஒரு மொழியும் முழுமை பெறும் வரை மற்ற மனிதர்கள் மொழிகள் இல்லாமல் கற்கால மனிதர்கள் போல இருந்தார்கள் என்பது நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி இருந்திருக்க வாய்ப்பு இல்லவே இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மொழியை ஆராயும் ஆராய்ச்சி குழுக்களை பார்க்கும்போது அவர்களின் இறுதி கூற்றுகள் ஒன்று அவர்கள் சார்ந்த இனத்தின் மொழியாக இருக்கும், அல்லது மதத்தின் மொழியாக இருக்கும், அப்படி ஏதோ தாங்கள் இருக்கும் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகவே ஆராய்ச்சியாளர்கள் தங்களது இறுதி முடிவை எழுதி வருகிறார்கள். அனைத்தும் திராவிட மொழி என்று தெற்கிலும். அனைத்தும் சமஸ்கிருதம் என்று வடக்கிலும். அனைத்தும் ஆர்மேனியன் மொழி என்று கிறிஸ்தவ நாடுகளிலும். அனைத்தும் சீன மொழி என்று சீனாவிலும் தீர்ப்புகள் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்டு வருகிறது. ஆம் அனைத்து தீர்ப்புகளுக்கு பின்பும் இனம் மதம் நிலம் போன்ற அரசியல் இருக்கிறது.
எல்லா மொழிகளும் ஏதோ ஒரு ஓசையிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் அது எந்த ஓசை எனது தாய் மொழி தான் என்று கூறுவது யார் கூறினாலும் ஏற்க முடியாத ஒன்றுதான். அந்த ஓசைக்கு யார் சொந்தக்காரர்கள் என்று அறிய உலகில் பல்வேறு பகுதிகளில் பிறந்த குழந்தைகளை மொழிகள் இல்லாத தீவில் வளரவிட்டால் கண்டுபிடிக்க இயலும். இயற்கையான ஓசை எந்த மொழியின் அடிப்படையில் அமைகிறது என்று. அப்படி கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல ஆனால் அது ஒரு ஈவு இரக்கமற்ற செயல் என்று யாரும் செய்ய முன்வர மாட்டார்கள்.. செய்யவும் கூடாது என்றே தோன்றுகிறது..
யார் முதலானவர் என்று கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது. நான்தான் மூத்த குடி என்று பெருமை பேசுவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது. ஒரு மொழியின் பெருமை இன்னொரு மொழியின் இனத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் என்பதே உண்மை. தமிழில் இருந்துதான் மலையாளம் பிறந்தது என்று மலையாள புத்தகங்களில் கல்வியாக இருந்தாலும். அதனை மலையாளிகளே நடைமுறைகள் ஏற்க மாட்டார்கள். ஆம் ஒருவரின் பெருமை இன்னொருவரின் சிறுமையாகிவிட்டது என்பதே நிதர்சனம்.
சொற்களை மொழியோடு பெரிதும் தொடர்புபடுத்தி பார்ப்பது எல்லா நேரங்களிலும் சரியாக இருப்பதில்லை ஏனென்றால் மொழிகள் வளர்ந்து வந்த ஆரம்ப காலத்தில் அனைத்து வார்த்தைகளும் அனைவராலும் ஏற்கப்பட்ட தான் இருந்திருக்க வேண்டும். உதாரணமாக இன்று நாம் பார்க்கும் ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகள் கிரேக்க வார்த்தைகளும் லத்தின் வார்த்தைகளும் போன்ற பல வார்த்தைகளை உள் வாங்கியது தான்.
இங்கு நம்மில் பலர் மொழியின் பெருமையை தேடுவது, நாம் எதிர்க்கும் பிற மொழியை சிறுமை ஆக்குவதற்கான காரணமே என்று பல நேரங்களில் பார்க்க நேர்கிறது. ஆதி மொழி யார் மொழி என்பது அவசியமற்றது. ஆனால் நாம் இத்தனை ஆண்டுகள் சுமந்து வந்த தாய் மொழி நமது கண் முன்னே அழிவதை நாம் ஏற்க முடியாது. அந்த இடத்தில் தான் எங்களைப் போன்றவர்கள் பிறக்கிறார்கள். ஆம் நாங்கள் மொழியின் வெறியர்கள் அல்ல ஒர் சராசரி தாய்மொழி பற்றாளர்கள் அவ்வளவே.
எங்களின் இலக்கு மொழியை அரசியலாக்கி பிழைப்பதல்ல. மொழியை எந்த அரசியலும் அழிக்கக் கூடாது என்பதே. இந்தி எதிர்ப்பு சமஸ்கிருத எதிர்ப்பு போன்றவை அவற்றில் தான் பிறக்கிறது.
இப்படி தனித்து வளர்ந்த மொழிகள் ஒரு விதம் என்றால் தனது ரகசியத்தை பிறர் தெரிந்து கொள்ளக் கூடாது என்று குழுக்கள் மொழிகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற சான்றுகளும் இருக்கிறது. அதாவது ஒரு தீவில் மிகவும் குறுகிய தூரத்தில் வாழும் குழுக்கள் வெவ்வேறு மொழிகளில் பேசி வருகிறார்கள் காரணம் தாங்கள் பேசுவதை பிறர் அறிய கூடாது என்பதற்காக.
மொழிகள் இன்று முழுமை அடைந்துவிட்டது ஆகையால் நம்மால் மீண்டும் ஒரு புது மொழியை வெகுவிரைவில் உருவாக்கி விட முடியும். சமீபத்திய ஆராய்ச்சியில் கணினி தனக்குள் பேச தனி மொழியை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மொழியை, வாழ்வியல் மொழி, ரகசிய மொழியில் என்று பிரித்து பார்க்கும் இடத்தில் தான் மெய்யியல் மொழியும் பிறக்கிறது. மெய்யியல் மொழி என்பது மனிதனின் மொழி முழுமை அடைந்த பின்பு பிறந்திருக்கவே அதிக வாய்ப்பு. மெயில் மொழியை வாழ்வியல் மொழியோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே மிகத் தவறு. இங்கு பலர் சமஸ்கிருதம் எனும் மெய்யியல் மொழி, தமிழ் என்னும் வாழ்வியல் மொழியை விட பழமையானது என்று நிறுவ முயல்கிறார்கள். அடிப்படையில் அது அர்த்தமற்றது. இரண்டும் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டால். இரண்டின் பழமையின் தேதியும் ஒன்றாகவே இருந்தாலும். வாழ்வியல் மொழியே பழமையானதாக இருக்கும். மெய்யியல் மொழி பழமையாக இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு அடிப்படை புரிதல். அரசியல் மதம் போன்ற கண்ணாடிகளை கழட்டி வைத்து பார்த்தால் அனைவருக்கும் இது விளங்கும்.
உலக அரங்கில் இந்திய மொழிகளை ஆராய்ந்து எழுதப்படும் அனைத்து கட்டுரைகளிலும் சமஸ்கிருத மொழியின் வார்த்தையின் ஒப்பீடே இருக்கிறது. ஒரு இனக் குழுவில் ஆண்களுக்கு மட்டும் தெரிந்த மொழி, பெண்கள் கூட பேச தடை செய்யப்பட்ட ஒரு மொழி சமஸ்கிரதம் அதன் அடிப்படையில் தான் அனைத்து வாழ்வியல் மொழியும் தோன்றியது என்று சித்தரிப்பது தவறான போக்கு. இதற்குப் பின்பு பெரும் லாபி இருக்கலாம். ஆனால் உலக ஆராய்ச்சியாளர்கள் தனது கண்களை சற்று விரிவடையச் செய்து வர வேண்டும். மதத்துக்குள் முடிகள் சிக்கிக் கிடக்கிறது என்பது பெரும் வேதனை.
தமிழில் பல ஒற்றை சொல் வார்த்தைகள் இருக்கிறது இரட்டை சொல் வார்த்தைகள் இருக்கிறது அதனை வைத்து அனைத்தையும் பிரித்து பார்த்து அர்த்தம் கற்பிக்கும் போது இங்கு பலர் தனது அரசியலுக்காக அதாவது தான் நேசிக்கும் மொழி சாதி மதம் போன்றவற்றை நிலைத்திருக்கச் செய்ய அதனை ஒரு உத்தியாக பயன்படுத்தி வருகிறார்கள் அதாவது தனது தேவையான பொருள் வருமாறு வார்த்தையை பிரித்து பொருள் கூறுவது.
1974 இல் தேவநேயப் பாவாணர் தலைமையில் தொடங்கப்பட்டு அவ்வப்போது மடலங்களாக வெளியிடப்பட்ட "தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி" எனும் தமிழ் அகராதியில் 13237 பக்கங்களும் பல ஆயிரம் வார்த்தைகளும் இருக்கிறது. அவை அனைத்தும் வேர்ச்சொல் மூலம் ஆராயப்பட்டு தொகுக்கப்பட்டவைகளே. அதனை நாம் 100% ஏற்கலாம்.
தொல்காப்பிய காலத்திலேயே தமிழ் முழுமை பெற்றதோடு இல்லாமல் தமிழர்களின் இலக்கண இலக்கியங்களின் வார்த்தைகளின் ஆழத்தை பார்க்கும்போது தமிழ் இலக்கணத்தில் மட்டுமல்ல வார்த்தைகளின் எண்ணிக்கையிலும் மிக மிக முன்னேறிய மொழி என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இதனை நாம் முதல் குடி என்று பறைசாற்றாமல், தமிழ் மூத்த குடி, தமிழ் மூத்த மொழி என்று பறைசாற்றினார் உலகம் ஏற்கும் என்றே தோன்றுகிறது.
மொழியை நேசிப்போம், பிறமொழிகளை மதிப்போம், தாய்மொழி அழியாமல் பாதுகாப்போம். உலக வளர்ச்சியோடு தாய்மொழியும் சேர்ந்து வளர நமது பங்களிப்பை சேர்ந்தளிப்போம்.
தோழமையுடன்
தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே

Comments
Post a Comment