அவளை கொன்றது அது
அவளை கொன்றது அது

இயந்திர உலகில் பணத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் உங்களில் நானும் ஒருவன். அயல்நாட்டு வாழ்க்கை என்றால் விடியல் சற்று முன்பாகவே வந்துவிடும்.
ஏழு மணிக்கு அலுவலகம் நோக்கி நகர வேண்டும். பொது மக்களோடு தொடர்பு இல்லாத வாழ்க்கை தனி வீடு தனி ஊர்தி என்று தனித்து இயங்கும் என்னைப் போன்று பலர் இருப்பார்கள்.
எங்கள் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கும் காலையில் அலுவலகம் உள்ளே நுழையும்போது அங்கே நுழைவாயில் ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண்மணி சிரித்த வண்ணமே எங்களை எப்போதும் வரவேற்பாள்.
வரும் அனைவருக்கும் காலை வணக்கம் சலிக்காமல் சொல்லுவாள் அவள். எத்தனை முறை அந்த பாதையைக் கடந்தாலும் அவள் வருபவர்களை சிரித்து வரவேற்றும் வழி இணைப்பையும் செய்து கொண்டே இருப்பாள்.
எங்கள் அலுவலகம் தொடங்கிய காலத்திலிருந்து அவள் அங்கே பணிபுரிந்து வந்தாள். எங்களைக் காண யாராவது வந்தால் அவர்களை அமரச் செய்து எங்களுக்கு செய்தி அனுப்புவாள். எங்களுக்கு எந்த பொருள் வந்தாலும் நாங்கள் எந்த பொருளை பெரிய இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாலும் அவளிடமே ஒப்படைப்போம். உணவு இடைவேளையில் அவள் உணவருந்திக் கொண்டு இருக்கும்போது கூட யாராவது வந்தால் அவர்களுக்கு உதவ எழுந்து செல்வதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.
பலர் அவளுடன் பேசி சிரித்து இருப்பதை பல நேரங்களில் கடந்திருக்கிறது. நான் மரியாதை நிமித்தமாக சிரிப்பதோடு சரி. கணினி முன் கம்பீரமாக சிரித்துக் கொண்டிருப்பாள் அவள்.
கடந்த இரண்டு வாரங்களாக அவளை அங்கு பார்க்க முடியவில்லை. என்ன ஆயிற்று என்று யோசித்து கடந்து வந்தேன். பிறகு அலுவலகத்திற்கு பொதுவாக அனைவருக்கும் வரும் செய்தியை வாசித்தேன். ஓ அவள் இறந்து விட்டாளா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். இல்லை உடல்நிலை சரியில்லை என்று கூட யோசிக்கலாம். ஆனால் வந்த செய்தி அப்படியில்லை.
ஆம் அவள் கொலை செய்யப்பட்டாள். இனி அவள் இடத்துக்கு வேறு ஒருவர் வருவாரா என்று நீங்கள் யோசிக்கலாம். அதுவும் இல்லை இனிமேல் அவள் இடத்திற்கு யாருமே வரப்போவதில்லை. ஆம் அவளையும் அவளை போன்றவர்களையும் கொன்றது அவள் முன்பு இத்தனை நாள் சேவகனாக அமர்ந்திருந்த அந்தக் கணினி தான்.
ஆம் இனி எங்கள் அலுவலகத்தில் வருபவர்கள் அந்த கணினியிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ன செய்வது யாரை பார்ப்பது என்று. அது இத்தனை நாள் அவள் செய்த வேலையை செய்யும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (A.i Artificial Intelligence) செயற்கை கணினி அறிவின் வளர்ச்சியால் முதலில் கொள்ளப்படுவது இவர்களைப் போன்ற Front Desk தொழிலாளிகள்தான்.
McDonalds மெக்டோனால்ட்ஸ் போன்ற கார்ப்பரேட் கடைகளில் ஆர்டர்களை எடுப்பதற்கு கணினிகள் வந்துவிட்டது. உங்கள் தேவையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். பணத்தை அதிலேயே செலுத்தி விடலாம்.
ஏன் அதை இன்னும் சுருக்கி உங்கள் மொபைலில் ஆப் போன்றவற்றிலும் இதை செய்யலாம். கைப்பேசி வருங்காலத்தில் கையடக்கக் கணினி இன்று கூட அப்படித்தான்.
இவைகள் பணி நீக்கம் அல்ல பணியே நீக்கப்பட்டது என்பதே உண்மை.. அவள் இதை விட சிறிய நிறுவனத்தை நோக்கி வேலைக்காக நகர்வாள். சிறிது காலம் கழித்து அங்கும் அந்தக் கணினி வந்து அவளை துரத்தும்.
வாழ்க்கையில் பாதி காலம் வரை ஒரு தொழில் செய்தவர்கள் அந்த தொழில் இனி இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படும் போது அவர்களது வாழ்க்கை பெரும் துயரத்துக்கு தள்ளப்படும்.
அமெரிக்காவில் பலர் வேலை இழப்பால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவைகள் எல்லாம் தற்கொலை அல்ல கொலை. நாகரிகம் வளர்ச்சி விஞ்ஞானம் என்று பல கொலைகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் அதில் இன்று ரோபோடிக்ஸ் முதன்மை வகிக்கிறது.
தொழில் புரட்சி வெடித்தபோது உலகப் போர் மூண்டது அதில் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்றும் கணினி உலகத்தில் ஒவ்வொரு நாடாக மாறி மாறி போர் மூண்டு மக்களை கொன்று வருகிறது.
ரோபோடிக்ஸ் உலகத்தில் பத்து படி நிலைகள் இருக்கிறது அதில் கடைசி பத்தாவது படிநிலை என்பது மனிதன் இருக்கும் இடத்தில் அவனை நீக்கிய அதற்கு பதில் கணினி அமைப்பது ஆகும். இது நமது சமகாலத்தில் நடக்கத் தொடங்கிவிட்டது.
ஒருவரை வேலையில் இருந்து நீக்குவது தனிநபர் நீக்கம் அல்ல. அந்தத் தனிநபரின் வாழ்வாதாரமும். அவரை நம்பி உள்ள ஒரு குடும்பத்தில் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
மக்கள் தொகை பெருகி விட்டது என்று தொடர்ந்து பரப்புரை செய்வதும் இந்த காரணத்திற்காக தான். விரைவில் ரோபோடிக்ஸ் பற்றிய ஆபத்துகளை உங்களுக்கு படிப்படியாக நாங்கள் எடுத்துரைப்போம்.
இவன்
தமிழன் திரு இங்கர்சால்
தமிழன் திரு இங்கர்சால்
good message
ReplyDelete