சித்தி
எனது அம்மா, எங்கம்மாவின் தங்கை #மம்மி, எங்க சித்தா
அம்மாவின் தங்கையை நான் சிறுவயதிலிருந்து மம்மி என்றே அழைப்பேன் காரணம் சித்தியின் மகன் அப்படி கூப்பிடுவதால், இந்த சித்தியும் சித்தப்பாவும் தான் எனது வாழ்வில் சொந்தங்களாக நான் தனித்து வளரும் வரை இருந்திருக்கிறார்கள். மற்ற அனைவரும் பேருக்கு உறவாக இருந்தாலும் அதற்குமேல் எனக்கு அவர்கள் எதுவும் செய்ததில்லை. (எனது தாய் மாமாவை தவிர. அவரைப் பற்றி என்றாவது ஒரு பெரிய கட்டுரை கண்டிப்பாக எழுதுவேன்).
எனது சித்திக்கு ஒரே மகன் அவன் நான் பிறந்த நாளிலே பிறந்தான். சிறுவயதில் இருந்து நாங்கள் இருவரும் ஒரே உடைதான் அணிவோம். ஒரே பள்ளியில் படித்தோம். இவை எல்லாம் பெரிய ஆச்சரியமில்லை ஆனால் இன்றளவும் என்னால் மற்றொரு நபரை பார்க்க முடியாது என்றால் அது என் சித்தி தான். அவர்கள் கண்ணில் கூட எனக்கும் அவரது மகனுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் பார்த்ததில்லை இது ஒரு நாள் இரு நாள் அல்ல என் வாழ்நாள் முழுவதிலும் அதை நான் பார்த்ததே இல்லை.
எனது அன்னை கூட எனது தம்பியிடம் சித்தியை விட சற்று அன்பை அதிகமாக காட்டுவார்கள் ஆனால் எனது சித்தியோ எந்த ஒருவித்தியாசமும் காட்டியதில்லை. அன்பில் கூட சரிசமமாகவே என்னை பாவித்தார்.
எப்போதும் ஏன் நான் சம்பாதிக்க தொடங்கும் வரை சித்தி எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பார். பணம் பல நேரங்களில் புது நோட்டுகளின் #கட்டுகளாகவே இருக்கும். அதன் வாசனை இன்றும் நினைவில் இருக்கிறது. சித்தி சித்தா இருவரும் வங்கியில் பணி புரிந்தவர்கள் ஆகையால் எப்போதும் புது நோட்டின் வாசனை அந்த பீரோவில் இருக்கும்.
ஒரு வயதுக்குப் பிறகு பணத்தை கொடுப்பதை நிறுத்தி விட்டார். காரணம் நீயே போய் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள் என்றார். உரிமையில் கொடுப்பதை நிறுத்தி எடுத்துக்கொள்வதை உரிமை ஆக்கினார் என் சித்தி.
என்னை பிறரிடம் அறிமுகப்படுத்தும் போது ''இது எனது பெரிய மகன்'' இது எனது சிறிய மகன் என்று கூறுவார் அப்போது பல நேரங்களில் பலர் உங்களுக்கு ஒரு மகன் தான் என்று நினைத்திருந்தேன் என்று கூறுவார்கள் அப்போது கூட இவன் எனது அக்கா மகன் என்று எனது எதிரில் கூறியதே இல்லை.
எல்லோரும் சைக்கிள் ஓட்டி பழகும் வயதில் எங்களுக்கு லூனா வாங்கித் தந்தார். எட்டு வயதில் அதை வைத்து முழு கும்பகோணத்தை யுமே சுற்றித் திரிந்தோம். எல்லோரும் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். இரண்டு பொடியன்கள் வண்டியில் போகிறார்கள் என்று..
பாட்டி சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள் ஆனால் எனது அன்னை பேசி நான் பார்த்ததில்லை ஆனால் எனது சித்தியோ வாய்ப்பே இல்லை, ஆங்கில எழுத்திலும் சரி பேச்சிலும் சரிநான் பயந்து ஓடுவேன்.. படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரை எங்களது படிப்பும் அறிவும் அவர்கள் முன் ஒன்றுமில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் மம்மி, மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். அப்போது நான் கோவையில் படித்துக் கொண்டிருந்தேன் அவர்கள் ஈரோட்டில் பணிபுரிந்த கொண்டிருந்தார்கள். இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது சென்றுவிடுவேன். மீன் கறி என்று தான் சமைத்து போடுவார். அப்படி தரையில் அமர்ந்து இலையில் சாப்பிட்ட காலங்கள் இன்று எத்தனை உயர்ந்த உணவகம் சென்றாலும் நாக்கில் ஒட்டுவதில்லை.
சித்தி இப்படி என்றால் சித்தப்பாவை கணிக்கவே முடியாது ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார் எதையும் முகத்தில் காட்டவே மாட்டார். முகம் மட்டுமல்ல ஆகமம் அவருக்கு வெள்ளையாக தான் இருக்கும். அதை விரும்பி செய்கிறாரா கடமையாக செய்கிறாரா என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் அவர் எனக்கு செய்ததை நான் திருப்பி செய்ய வேண்டும் என்றால் அதற்கு எஞ்சியிருக்கும் வாழ்நாள் போதாது. இது சித்தப்பாவுக்கு மட்டுமல்ல சித்திக்கும் தான்.
சிறுவயதில் ஏதோ தெரியாமல் மம்மி என்று அழைக்க தொடங்கிய இன்று வரை அதை மாற்ற முடியவில்லை மாற்ற விரும்பவில்லை.
இவையெல்லாம் இங்கு கூற காரணம். என்னால் எந்த விதத்திலும் அந்த அன்பிற்கு பிரதிபலன் செய்ய முடியாது என்ற ஆதங்கத்தில் தான். எழுத்துகளிலாவது அன்பையும் நன்றியையும் தெரியப்படுத்தவே.
அன்பு முதல் கொண்டு அனைத்தும் அங்கு இருக்கிறது அவர்களுக்கு நாம் தருவதற்கு எதுவுமில்லை நன்றியை தவிர
படத்தில் விஜயா, வசந்தா, சுந்தரமூர்த்தி
படிக்கும் போது அழுகை..
ReplyDelete